சுடச்சுட

  

  ராஜபாளையம் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

  By ராஜபாளையம்  |   Published on : 21st June 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே உள்ள விசைத்தறியாளர்கள் 50 சதவிகித கூலிஉயர்வு கோரி 5-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் பணி செய்து வருகின்றனர். இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கும், சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவு செய்யப்படும்.

  இந்த ஆண்டு 50 சதவிகித கூலி உயர்வுடன் புதிய ஒப்பந்தம் முடிவு செய்யக் கோரி விசைத்தறியாளர்களுக்கும், மருத்துவ துணி உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

   இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இறுதியாக நடைபெற்ற 5-ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் திங்கள்கிழமை விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பழனிவேல் தலைமையில், சோமசுந்தரம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  சங்கரபாண்டியபுரத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்கள், வன்னியம்பட்டி சாலை, சத்திரப்பட்டி புதுத்தெரு, நடுத்தெரு போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்து அய்யனாபுரத்தில் உள்ள மேலராஜகுலராமன் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  50 சதவிகித கூலி உயர்வு, பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 1 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  எனவே கூலி உயர்வு விவகாரத்தில் அரசு தலையிட்டு விரைவில் சுமுகமான தீர்வு எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

  போராட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், பாமக உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கரேஸ்வரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

  சிறுவிசைத்தறி துணி தயாரிப்பாளர்கள் ஆதரவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கரபாண்டியபுரத்தில் சிறு விசைத்தறி துணி உரிமையாளர்கள் சங்கம் (மாஸ்டர் வீவர்ஸ்) கூட்டம் தலைவர் மாத்தூரான் தலைமையில் நடந்தது. அதில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விசைத்தறிகளை இயக்க வேண்டும்.

   தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்வு எங்களுக்கும் வழங்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai