சுடச்சுட

  

  கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர் வேலைநிறுத்தம் 9-ஆம் நாளாக நீடிப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 24th June 2016 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  50 சதவீத கூலி உயர்வு கோரி சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 9 ஆம் நாளாக நீடித்தது.  

   ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் 50 சதவீத கூலி உயர்வு உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரம் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

   கடந்த  செவ்வாய்க்கிழமை 6 ஆம் கட்டமாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல், இம்மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் வியாழக்கிழமை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.  இந்தநிலையில், தொழில் மந்தமாக இருப்பதால் கூலி உயர்வு சாத்தியமில்லை. தற்போதைய கூலியே தர முடியும் என, பேண்டேஜ் துணி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

  உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு:

   இது குறித்து பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: தற்போதுள்ள சூழ்நிலையில் கூலி உயர்த்தி தர இயலாது, தொழில் மிகவும் மந்தமாக உள்ளது  என பலமுறை தெரிவித்தோம். எங்களது தொழில், தொழில் நுணுக்கங்கள் பற்றி தொழிலாளர் நல வாரிய அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. மற்ற தொழில்களைப் போல் 40 சதவீதம், 50 சதவீதம் என கூலியை உயர்த்தித் தர முடியாது. கேட்கும் அளவிற்கு கூலியை உயர்த்திக் கொடுத்தால் எங்களால் தொழில் செய்ய முடியாது.

    கூலி உயர்வு ஒப்பந்தம் போடும்போது ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் எங்களை மட்டும் நிர்ப்பந்தம் செய்கின்றனர். எங்களுக்கும் வேறு தொழில் தெரியாத காரணத்தால், அதிகாரிகள் நிர்ப்பந்தம் காரணமாக என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளோம் எனக் கூறினார்.  ஆனால், விசைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களுக்கு கூலி  உயர்வு அவசியமானது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai