சுடச்சுட

  

  தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கான மானியம் கிடைக்காததால் பயனாளிகள் அதிருப்தி

  By விருதுநகர்  |   Published on : 24th June 2016 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்ட தனி நபர் கழிப்பறைகளுக்கு மானியத் தொகை கிடைக்காததால் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.

   திறந்த வெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதால், தொற்று நோய் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்பவதை முன்னிட்டு, மத்திய அரசு தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.

   விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

   கிராம ஊராட்சிப் பகுதிகளில் தனி நபர் கழிப்பறைகள் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.9 ஆயிரம், மாநில அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 11 ஒன்றியங்களில் 42,061 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 14,784 கழிப்பறைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கழிப்பறை கட்டியவர்களுக்கு மானிய உதவித்தொகை கிடைக்காததால் விண்ணப்பித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கழிப்பறைகளை கட்டாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

   குறிப்பாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி, நரிக்குடி ஒன்றியங்களில் மிகவும் குறைவாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

   அதேபோல், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.8 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய  7 நகராட்சிகளிலும் தனி நபர் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலும், பெரும்பாலானோருக்கு மானிய உதவி கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த ராஜா கூறியது: நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளை பயனாளிகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வழங்கி வருகின்றனர். ஆனால், நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதை உள்ளாட்சி நிர்வாகத்தினர் காலதாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் மேலும் பலர் கழிப்பறை கட்டும் பணியை தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றார்.

     இதுகுறித்து நகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியது: நகராட்சியில் கட்டப்படும் கழிப்பறைகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரம், மாநில அரசு ரூ.2 ஆயிரம், நகராட்சி ரூ.2 ஆயிரம் என ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். தேர்தல் காலமாக இருந்ததால், மாநில அரசின் நிதி கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

     மேலும், நகராட்சியில் பொது நிதி இல்லாத காரணத்தால், பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

  காத்திருப்போர் எண்ணிக்கை

  ஒன்றியங்களில் கழிப்பறைகள் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் கழிப்பறைகள் கட்டியவர்கள் (அடைப்புக் குறிக்குள்) விவரம்:

  ராஜபாளையம் - 6971 (1138)

  வத்திராயிருப்பு - 907 (508)

  வெம்பக்கோட்டை - 3004 (1170)

  ஸ்ரீவில்லிபுத்தூர் - 3830 (1582)

  சிவகாசி - 7601 (1909)

  விருதுநகர் - 4740 (2025)

  சாத்தூர் - 4479 (2094)

  அருப்புக்கோட்டை- 2553 (1222)

  நரிக்குடி - 2729 (871)

  காரியாபட்டி - 1719 (777)

  திருச்சுழி  - 3578 (1488)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai