சுடச்சுட

    

    மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 25th June 2016 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

    விருதுநகர், சின்னபேராலியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ்(30). இவருக்கும் திருச்செந்தூர், புளியங்குளம் கருப்பன்ணன் என்பவரின் மகள் கச்சம்மாள்(24) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சுவேதா (7), ஹரிஸ்குமார் (4) என்ற இரு குழந்தைகள் உண்டு. ரமேஷ் வெளியூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். கச்சம்மாள் தையல் தொழில் செய்து வந்தார்.

    ஊர் வரும் போதெல்லாம் குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவியிடம் ரமேஷ் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து கச்சம்மாள் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கண்டித்துள்ளார், மேலும் ஊர் பஞ்சாயத்து கூடி ரமேஷைக் கண்டித்துள்ளது.

    இந்நிலையில் நாகப்பட்டினம், உத்திரன்குடிக்கு கொத்தனார் வேலைக்குச் சென்றபோது, அங்கு ஒரு கல்லூரி மாணவியுடன் ரமேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அந்தப் பெண்ணுடன் ரமேஷ் பழக்கம் வைத்துள்ளார். ஆனால், திருமணம் ஆனவர் எனத் தெரிந்ததும், அந்தப் பெண் ரமேஷுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டாராம்.

    இந்நிலையில் கடந்த 18.1.14-ஆம் தேதி ஊருக்கு வந்த ரமேஷிடம் கச்சம்மாள் வீட்டுச் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த மரப்பலகையை எடுத்து மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

    இது குறித்து கச்சம்மாளின் தங்கை ராக்கு, விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரமேஷைக் கைது செய்தனர்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில், ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி என்.ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை ரமேஷின் இரு குழந்தைகளின் பெயரில் வைப்புநிதியாக வைக்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் மு.மலர்விழி ஆஜராகினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai