Enable Javscript for better performance
அடிப்படை வசதிகள் இல்லாத விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொது மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகள் இல்லாத விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொது மக்கள் அவதி

    By விருதுநகர்  |   Published on : 26th June 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிப்பறை மற்றும் காத்திருக்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

         விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் 100-க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாகவும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.

    மேலும், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஏற்கனவே இருந்த காத்திருப்போர் கூடம், ஆதார் அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை எடுக்கும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால், கைக் குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்கார இடமின்றி வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    மேலும், மனு கொடுக்க வருவோருக்கு குடிநீர் வசதி இல்லாததால், அருகில் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். கடை உரிமையாளர்கள், இலவசமாக தண்ணீர் தர மறுப்பதால் அங்கு விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

      ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. மனு கொடுக்கும் இடத்தில் உள்ள கழிப்பறை மற்றும் அலுவலர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக காணப்படுகின்றன. இதனால், அலுவலர்களும் பொதுமக்களும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மாவட்டத் தொழில் மையத்திற்குச் செல்லும் வழியில் தேங்கி நிற்கிறது. அங்கு வாறுகால் தனி நபரால் அடைக்கப்பட்டுள்ளதால், கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி, கொசுக்கள் உருவாகின்றன. இதனால் பகல் நேரத்திலேயே கொசுக்கள் அலுவலகங்களில் புகுந்து அலுவலர்களைக் கடிக்கும் நிலை உள்ளது. மேலும், சமீபத்தில் பெய்த மழையால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் முள்புதர்களும், செடி, கொடிகளும் நிரம்பி காணப்படுகின்றன. அவற்றை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    எனவே, பொது மக்கள் நலன் கருதி, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai