சுடச்சுட

  

  மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை: சிகிச்சையில் தாமதம்

  By விருதுநகர்  |   Published on : 27th June 2016 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையில் 33 மருத்துவர்கள், 58 செவிலியர்கள், 21 மருந்தாளுனர்கள் மற்றும் லேப்டெக்னீஷியன் 38 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

  விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளே அதிகம் உள்ளனர். பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  2014 டிசம்பர் முதல் 2015 பிப்ரவரி வரை ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவியதில் 35 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியில் சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர். மேலும், ஆங்காங்கு தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் பணியில் மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

  அதுமுதல் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் காய்ச்சலால் சிகிச்சைக்கு வருவோரின் விபரங்களை மாவட்ட சுகாதார அலுவலகம் சேகரித்து வருகிறது. 

  விருதுநகர் சுகாதார மாவட்டம், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 51 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. விருதுநகரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. மேலும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, வத்திராயிருப்பு, திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

  இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருந்தாளுனர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணி புரிந்து வந்தனர்.

  கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் மதுரை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

  நரிக்குடி கிராமபுற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மானாமதுரை, பார்த்திபனூர் போன்ற இடங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது.

  தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் காய்ச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக உள்ளது. இதனால் சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது.

  விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை அலுவலர் ஒருவர் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமபுற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 33 மருத்துவர்கள், 58 செவிலியர்கள், 21 மருந்தாளுனர்கள், 21 லேப்டெக்னிஷியன், 38 கிராம  சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் உள்ளது.

  குறிப்பாக நரிக்குடி பகுதிக்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள் ஒரு சில மாதங்களிலே வேறு ஊர்களுக்கு மாறுதல் வாங்கி சென்று விடுகின்றனர் என்றார்.

  மழைக்காலம் தொடங்கும் முன் காலிப்பணியிடங்களை நிரப்பி, ஏழைகளுக்கு தடையற்ற சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai