சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

  By விருதுநகர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) செ.முத்துக்குமரன் தலைமை வகித்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.செல்வம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:

   ராமச்சந்திரராஜா (தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்): தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் ரத்து என அறிவித்துள்ளது. அனைத்து பயிர்க்கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். பீகார், உத்தரபிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வன விலங்குகளால், பயிர்கள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவற்றைக் கொல்ல சட்டம் உள்ளது. அதே போல், தமிழகத்திலும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

   அ.விஜயமுருகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர்): விருதுநகர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், இங்கு கொப்பரை கொள்முதல் நிலையம் இல்லை. புங்கன்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்துடைப்புக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.

   ஞானகுரு (விவசாயி): மலையடிவாரங்களில் மா, பலா, கொய்யா விவசாயம் செய்கிறோம். இங்கு கரடி, காட்டுப்பன்றிகள் நுழைந்து இவற்றை சேதப்படுத்துகின்றன. எனவே, விவசாய நிலங்களைச் சுற்றி சோலார் மின்வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மானியமாக பழக்கன்றுகள் வழங்க தோட்டக்கலை துறையினர் மறுக்கின்றனர். 

  ராமச்சந்திரராஜா (தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்): விவசாயம் செய்யும் பகுதிகளில் அடிக்கடி மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. இது பற்றி மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தால், 3 நாள்களுக்குப் பிறகு தான் சரி செய்கின்றனர். தற்போது, தென் மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பலமாக வீசி வருகிறது. எனவே, உடனடியாக மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டும். மா மரத்தில் பூக்கள் உதிர்வதை தடுக்க, மா விவசாயிகளுக்கு கவாத்து பயிற்சியளிக்க வேண்டும்.

   இவற்றுக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) செ.முத்துக்குமரன் பேசியதாவது: பட்டம்புதூர் கண்மாயில் சேதமடைந்த மடைகள் மற்றும் கழுங்கை சீரமைப்பது தொடர்பாக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும் மடை, கழுங்கு சீரமைக்கப்படும். பயிர்கடன்கள் குறித்தும், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். வாடியூர் கண்மாயில் முள் செடிகளை அகற்றவும், சேதமடைந்த கரைகளை மழைக் காலத்துக்குள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இம்மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பானகோரிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகார்கள் வந்தால் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  தற்போது வத்திராயிருப்பு அருகே உள்ள புங்கன்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஜூலை மாத கடைசியில் மா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை ஆகிய கன்றுகளை தோட்டக் கலைத்துறையில் வாங்கிக் கொள்ளலாம். மின் மாற்றிகளை உடனே சீரமைக்க மின்வாரியத்திற்கு உத்தரவிடப்படும். வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் உள்ள மா விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

   முன்னதாக விவசாயிகள், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். ஆனால், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த செ.முத்துக்குமரன், இனிமேல் அடுத்து வரும் மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமையில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai