விருதுநகர் அருகே நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரை தாக்க முயற்சி செய்ததாக ஆசிரியர் மீது புதன்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ளது நகராட்சி உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி தலைமை ஆசிரியை கணேஷ்வரி (45). இதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மணிமாறன். புதன்கிழமை தலைமையாசிரியை கணேஷ்வரி வகுப்புகளை பார்வையிட்டபடி வந்துகொண்டிருந்தார். ஆசிரியர் மணிமாறன் வகுப்பை கடந்து சென்றபோது அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரது வகுப்புக்குச் சென்ற கணேஷ்வரி, மணிமாறனிடம், 9, மற்றும் 10ஆம் வகுப்பு ஆசிரியர்கள் விடுமுறையில் உள்ளதாகவும், எனவே அந்த வகுப்புகளையும் சேர்த்து கவனிக்குமாறும் மணிமாறனிடம் தெரிவித்துள்ளார். இது மணிமாறனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தலைமை ஆசிரியை கணேஷ்வரியை அவர் தரக்குறைவாகப் பேசி, டஸ்டரை அவர் மீது எறிந்து தாக்கவும் முயன்றாராம்.
அதைப்பார்த்து அங்குவந்த சக ஆசிரியர்கள், இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தொடக்கக் கல்வி அலுவலர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது கணேஷ்வரியை, மணிமாறன் தாக்க முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமையாசிரியை கணேஷ்வரி புகார் செய்தார். அதன்பேரில் ஆசிரியர் மணிமாறன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதுபோல் ஆசிரியைகளை தரக்குறைவாக பேசியதாக மணிமாறன் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புகார் உள்ளது. அந்தப்புகார்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறுபடியும் தலைமை ஆசிரியை தாக்க முயற்சித்துள்ளார்.