விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலகம் அமைப்பதற்கான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. அடுத்த வாரம் இறுதிக்குள் இந்த நூலகம் செயல்படத் தொடங்கும் என மாவட்ட மைய நூலக அலுவலர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில மைய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், வட்டார நூலகம், கிராமப்புற நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 3900 உள்ளன. இந்த நூலகங்களில் தன்னப்பிக்கை நூல்கள், கல்லூரி பாட புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், இலக்கியம், பொது அறிவு நூல்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், பல்வேறு பதிப்பகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றன. இதனால் நாள்தோறும் பட்டதாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது குழந்தைகளுக்கான தனிப்பிரிவு நூலகம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட மைய நூலகங்களில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக விருதுநகர், ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இப்பிரிவு தொடங்குவதற்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்நிதியின் மூலம் கட்டுமானப் பணிகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள், 3 கணிப் பொறிகள், உலக உருண்டை, உலக புவியியல் வரைபடம், செஸ் போர்டு, கேரம் போர்டு, சறுக்கி விளையாடுதல், ஊஞ்சல் போன்ற உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. அதே போல், குத்துச் சண்டை அரங்கம், ஹோம் தியேட்டர், நீதிக்கதைகள் கூறும் குறுந்தகடுகள், பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டி, இரும்பு அலமாரி, குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு படிக்கும் வகையிலான அடிப்படை புத்தகங்கள், குழந்தைகள் விரும்பும் குறும்படங்கள், சிறிய நாற்காலிகளுடன் வட்ட வடிவிலான மேஜை உள்ளிட்ட குழந்தைகளை கவரும் வகையில் இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4 பக்கச் சுவர்களிலும் குழந்தைகள் விரும்பும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டு நவீன தனிப்பிரிவு நூலகம் தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து மாவட்ட மைய நூலக அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:
குழந்தைகள் விரும்பும் வகையில் நவீன தனிப்பிரிவு நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அமைப்பதன் மூலம் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிப்பதோடு புத்திக் கூர்மையும் ஏற்படும். ஒவ்வொரு நாளும் இந்த நூலகத்துக்கு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது, இந்த நூலகத்தில் தொலைக்காட்சி, ஹோம் தியேட்டர் மற்றும் கணிப் பொறி ஆகியவைகளை பொருத்துவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து தயாராக உள்ளது. இதையடுத்து ஆட்சியரின் அனுமதி கிடைத்ததும், அடுத்த வாரம் இறுதிக்குள் குறிப்பிட்ட நாளில் தொடங்கி வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.