விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 27சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள பெரியவாடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (29). இவர் கன்னிசேரியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டு விட்டு கடைக்கு சென்று விட்டாராம். கடையில் இருந்த அவருக்கு வீடு திறந்து கிடப்பதாக தகவல் வரவே, அவர் சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து சம்பவங்கள்: விருதுநகர் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை காலையில் கதவை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்குச் சென்று விட்டாராம். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் அலமாரியில் வைத்திருந்த 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேந்திரன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்து நகையைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள பெரியமருளூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி பாண்டி (31). இவரும் இவரது மனைவியும் வழக்கம் போல் புதன்கிழமை காலையில் கதவை பூட்டி சாவியை வீட்டின் நிலையில் வைத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டனராம். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2 சவரன் தாலிச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சக்திபாண்டி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.