இலவச சட்ட உதவி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விருதுநகர் நீதிமன்ற சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் எம்.இ. பத்மா தெரிவித்தார்.
விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் குழுவும், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டமும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு மருத்துவத் துறை இணை இயக்குநர் கதிரேசன் தலைமை வகித்தார். செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கே. சுல்தான் அலாவுதீன் முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி மற்றும் வட்டார சட்டப்பணிகள் குழுத் தலைவர் எம்.இ. பத்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமுள்ளது. எனவே பெண்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம் ஆகும். இவைகளை தடுப்பதற்காக நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி முகாமும் நடத்தப்படுகிறது. இலவசமாக நடத்தப்படுகிற முகாம் என எண்ணாமல் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செவிலியர் பணி என்பது பொதுமக்களோடு நெருங்கிய தொடர்புடைய பணியாகும். பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்குள்ளாகி சிகிச்சை பெறுகிறவர்களிடம் அன்பாகவும், பாசமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும், மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி முழுமையாக கிடைக்கும் வகையில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் வாக்கு மூலம் பெறும்போது செவிலியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இதில், விருதுநகர் ஜே.எம்.1 நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவர் எம்.பிரிதா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே. ஜோதி, நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றத்தின் நடுவர் எ. பாலகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் சி.டி. சக்கரவர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.எஸ். சோமசுந்தரம், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் எம். அன்புவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் எ.பிரகலாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டத்தின் தலைவர் பி. அழகுசுந்தரம், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் பி.பாண்டியராஜன், எஸ். ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
நிறைவாக வழக்குரைஞர் மற்றும் மக்கள் நீ திமன்ற உறுப்பினர் பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.