விருதுநகர், செப். 23: எட்டயபுரம் அருகே கொள்ளை கும்பலால் தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (38). இவர் அங்குள்ள மணல் குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், காரில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கு வந்துள்ளார். காரை புதுக்கோட்டையைச் சேர்ந்த காளிமுத்து மகன் கார்த்திகேயன் (28). ஓட்டி வந்துள்ளார். இவர்கள் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் மணல் குவாரியில் பணம் வசூல் செய்துவிட்டு திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முத்துலாபுரம் பாலம் அருகே வந்தபோது சிலர் காரை வழிமறித்து கார்த்திகேயனை அரிவாளால் வெட்டினார்களாம். பிறகு, 5 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி காரில் ஏறிக் கொண்டது.
காரை அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஓட்டினாராம். பிறகு காரை நிறுத்தி பாண்டியன் வைத்திருந்த ரூ.28 லட்சத்தை பறித்துக் கொண்டு அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் விலக்கருகே இறங்கி மற்றொரு காரில் தப்பிச் சென்றார்களாம்.
அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த கார்த்திகேயன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் அருப்புக்கோட்டை வந்து மருத்துவமனையில் இருந்த பாண்டியன் மற்றும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினார்கள்.