விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறப்பு இலவச இருதய சிகிச்சை முகாம் செப்.28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஜி. சாலமோன் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவகங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள தென் மாவட்டங்களில் இதுவரை சிறப்பு இருதய சிகிச்சை முகாம்கள் 12 நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 200 முதல் 250 குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்ட சுமார் 280 பேருக்கு சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் முழுவதும் இலவசமான உயர்தர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நோயின் தன்மையைப் பொறுத்து சுமார் ரூ. 8 லட்சம் வரை கூட செலவு ஆகும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அரசு வழங்கும். மீதித் தொகையை ஆல்ப்ரட் சாலமோன் இருதய அறக்கட்டளை உள்ளிட்டவை மூலம் பெறப்பட்டு சரிக்கட்டப்படுகிறது. தென் மாவட்டங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எந்த ஒரு குழந்தையும் இருதய நோயுடன் இருக்கக் கூடாது என்பதுதான் முகாம் நடத்துவன் நோக்கம் என்றார் அவர்.
மருத்துவமனையின், மருத்துவ சேவை உதவி மேலாளர் டி.ராஜ்குமார் கூறுகையில், நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பயப்படும் காலம் மாறிப்போய்விட்டது. தற்போது நவீன தொழில் நுட்பத்தில், உயர்தர அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு வந்து செல்லும் செலவு மட்டும்தான். மற்ற அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. 28-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் முகாமிற்கு தங்களது குழந்தையின் பெயர் உள்ள குடும்ப அட்டை. குழந்தையின் பெயர் குடும்ப அட்டையில் இல்லை என்றால் பிறந்த சான்றிதழ், முதல்வரின் காப்பீட்டு அட்டை உள்ளிட்டவற்றுடன், தங்களது குழந்தைக்கு எங்காவது ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு அதற்கான அறிக்கையும் இருந்தால் அதனையும் எடுத்து வந்து பயன் பெறலாம். முகாமில் சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதியைச் சேர்ந்த குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெறலாம். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கணபதி சுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்றார் அவர்.
அப்போது டாக்டர் ஜி.கோதண்டராமன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.ஜெயராஜ், செயலாளர் ஆர்.செல்வராஜ், துணைத் தலைவர் எஸ்.துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முகாமை ரோட்டரி கிளப் ஆஃப் கிரீன் சிட்டி இணைந்து நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு 98408-44392, 044-28296282 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.