Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு  தேர்வு: மையங்களில் ஆட்சியர் ஆய்வு - Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 31,967 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில், 532 பேர் தமிழ் முதல் தாள் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு நடைபெற்ற மையங்களில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் நேரில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.   

        தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கி, தொடர்ந்து ஏப்.9ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக புதன்கிழமை காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

       விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 5819 மாணவர்களும், 5486 மாணவிகளும் என மொத்தம் 11,305 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 5042 மாணவர்களும், 4973 மாணவிகளும் என 10,015 பேரும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4788 மாணவர்களும், 4646 மாணவிகளும் என மொத்தம் 9434 பேரும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 30,754 பேர்  86 மையங்களில் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்களாக 1440 பேரும், மாற்றுத்திறனாளிகள் 35 பேரும் என பங்கேற்றனர். இதில், தமிழ் முதல் தாள் தேர்வில் 532 பேர் கலந்து கொள்ளவில்லை. 

       இத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். அதில், விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. அதோடு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார்.  அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி. ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai