Enable Javscript for better performance
புதுவாழ்வு திட்டம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    புதுவாழ்வு திட்டம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க உத்தரவு

    By விருதுநகர்  |   Published on : 28th January 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர், ஜன. 27: புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு குழு உறுப்பினர்களுக்கு, தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், இதற்காக ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

      இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறைகள், மனரீதியான தாக்குதல் போன்றவைகளுக்கு அவர்கள் ஆளாகும் சூழ்நிலை உள்ளது.

      இதைத் தடுக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதனடிப்படையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் வகையிலான திட்டத்தை அரசு அறிவித்து, அதற்கு ரூ.4.50 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.     இதனடிப்படையில், தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் உள்ள 4,176 கிராமங்களைச் சேர்ந்த 40,740 வறுமை ஒழிப்புச் சங்க மகளிர் குழு நிர்வாகிகளுக்கும், 30,096 ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளைச் சேர்ந்த 71,836 நிர்வாகிகளுக்கும் புதுவாழ்வுத் திட்டம் மூலம் இப்பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

      ஊராட்சி அளவில் 30 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு, 12 மணி நேரம் மாவட்ட தற்காப்புப் பயிற்சி மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

      இதனால், மகளிர் எளிய முறையில் உடற்பயிற்சி, கராத்தே மற்றும் ஜூடோ நுணுக்கங்கள், பலவீனத்தை பலமாக மாற்றும் ஆற்றல், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன், துணிச்சல், அபாயகரமான சூழ்நிலையில் பயமின்றி துணிச்சலுடன் எதிராளியை கை, கால்கள், ஆயுதங்களால் தாக்கும் ஆற்றல், அதனால் தங்களை பாதுகாக்கும் திறன்களையும் பெறுகிற வகையில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

       இது குறித்து மாவட்ட புதுவாழ்வு திட்ட அலுவலர் சண்முகராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் ஊராட்சிகள் அளவில்  செயல்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல், இம்மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 165 கிராமங்களில்  செயல்படுத்தப்படுகிறது.  ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 21 மகளிர் வீதம் 3,465 பேருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விரைவில் இப்பயிற்சி அளிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள தற்காப்பு பயிற்சி மையங்களின் பயிற்சியாளர்கள் மூலம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai