Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் தானியங்களின் கொள்முதல் விலை குறைந்தது: நஷ்டத்தில் தள்ளப்பட்ட விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் தானியங்களின் கொள்முதல் விலை குறைந்தது: நஷ்டத்தில் தள்ளப்பட்ட விவசாயிகள்

    By விருதுநகர்  |   Published on : 28th January 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர், ஜன. 27: விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட தானியங்களின் விலைக் குறைவால் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

      தற்போது, மாவட்டத்தில் நன்றாக விளைந்துள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  சாகுபடிக்கு முன்பு கூடுதலாக விலை இருந்தது. தற்போது, ஒரேநேரத்தில் விவசாயிகள் தானியங்களை அறுவடை செய்வதால், வியாபாரிகள் பேசி முடிவு செய்து விலையை குறைத்துவிட்டனர்.   அறுவடைக்கு முன்பு மக்காச்சோளம் ஒரு குவின்டால் 1,300 ரூபாயும், இரும்புச் சோளம் 1,500 ரூபாயும், வெள்ளைச் சோளம் ரூ. 1,600, குதிரைவாலி ரூ. 2,500, கேழ்வரகு ரூ. 2,500, பருத்தி ரூ. 3,500, நெல் ரூ. 1,800 என விலை இருந்தது.

      தற்போது, மக்காச்சோளம் ரூ. 1,150, இரும்புச் சோளம் ரூ. 1,200, வெள்ளைச் சோளம் ரூ. 1,300, குதிரைவாலி ரூ. 2,200, கேழ்வரகு ரூ. 2,250, பருத்தி ரூ. 2,700, நெல் ரூ. 1,450 என்ற விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

      இந்த விலைக் குறைப்பால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அதனால், தானியங்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அரசு கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.    இது குறித்து, வட்டார நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராமானுஜம் என்பவர் கூறியது: கடந்தாண்டு விலை அதிகமாக கிடைத்தது.  அதேபோல், நிகழாண்டிலும் விலை கிடைக்கும் என விவசாயிகள் மானாவாரி நிலங்களில் அதிகமாக தானிய வகைகளை பயிரிட்டனர்.

      ஒரே நேரத்தில் அறுவடை செய்து வருவதால், முதலீட்டை எடுக்கவேண்டிய அவசரத்தில் விவசாயிகள் உள்ளனர். இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வியாபாரிகள், பேசி முடிவு செய்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.   இதனால், விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைத் தடுக்கும் வகையில், அரசு கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என்றார்.

      இது தொடர்பாக, வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) முத்துமுனியாண்டி கூறியது: விவசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்கும் வகையில் அறுவடை செய்த  தானியங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, வேளாண் வணிக மையம் மூலம் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தானியக் கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது. 

     இதற்கிடையே, அவசரத் தேவைகளுக்காக வேளாண் விற்பனைச் சங்கம் மூலம் 50 சதவீதம் கொதுவைக் கடன் 0.5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai