Enable Javscript for better performance
மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்துகள் வாங்கக் கூடாது: பொதுமக்களுக்கு  ஆட்சியர் அற- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்துகள் வாங்கக் கூடாது: பொதுமக்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 16th November 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக்கள் மருந்து கடைகளில் தாமாக முன்வந்து மருந்து வாங்கும் பழக்கத்தைத் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
      விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணி தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
    இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் உற்பத்தியாகும் ஏ.டி.எஸ். கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொசுப்புழுக்கள் அதிகமாக உள்ள கிராமங்களில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணியாளர்கள் குழு, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார மருத்துவ அலுவலர் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.
      ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீரில் 0.2 பிபிஎம் எஞ்சிய குளோரின் இருப்பதை உறுதி செய்து, கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய்களில் உடைப்பு, பழுது, நீர்க்கசிவு ஆகியவைக் காணப்பட்டால், அவற்றை உடனே சரி செய்ய வேண்டும்.
      கிராமப்புறங்களில் போலி மருத்துவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பெயர் பலகை வைத்துக் கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க கூடாது.  அவ்வாறு மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் போலி மருத்துவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
      மேலும், பொதுமக்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தாமாகவே மருந்து கடைகளில் மருந்து வாங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.   கூட்டத்தில் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்(பொறுப்பு) இணை இயக்குநர் ஐ.துரைராஜ், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ஆ.பழனிச்சாமி (விருதுநகர்), ந.கலுசிவலிங்கம் (சிவகாசி), துணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் முத்துவீரலட்சுமி உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைத்து அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai