Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் மகனைக் கொன்று எரித்த தாய், தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து எரித்ததாக அவரது தாய், தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதியாதி கண்மாய்க்குள் வியாழக்கிழமை பிற்பகலில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் ஆட்டோ சென்ற தடம் இருந்ததைக் கண்டறிந்து விசாரித்தபோது கொலை தொடர்பாக துப்பு துலங்கியது.
    போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் -சாந்தி தம்பதியரின் மகன் சிலம்பரசன் (24) என தெரிந்தது. சிலம்பரசன் மினி பேருந்தில் வேலைசெய்து வந்துள்ளார். அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தாய், தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்வாராம். கடந்த புதன்கிழமை சிலம்பரசன் அவ்வாறு தகராறு செய்தபோது, அவரை தாய், தந்தை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலைசெய்தனராம்.
    பின்னர் நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ராமராஜ் உதவியுடன் ஆட்டோவில் சடலத்தை ஏற்றி கண்மாய்க்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
    ஆனால் காற்றில் தீ அணைந்து உடல் முழுவதும் எரியாத நிலையில் இச்சம்பவம் வெளியில் தெரியவந்தது.
    சிலம்பரசனின் தந்தை முருகன், தாய் சாந்தி, ஆட்டோ ஓட்டுநர் ராமராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். கைதான சாந்தி, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிகிறார். கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai