Enable Javscript for better performance
விருதுநகர் சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 08th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கட்டுமான பொருள்களைக் குவித்து வைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். விருதுநகர் நகராட்சி எல்கைக்கு உள்பட்ட அறிவியல் மன்றம், மாவட்ட மைய நூலகம் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இப்பகுதியில், நாள்தோறும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளிச் செல்லாததால் குப்பைகள் தேங்குவதாக கூறப்படுகிறது.
    மேலும், புல்லலக்கோட்டை சாலை, அறிவியல் மன்றம், பாவாலி சாலை, கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், மாடர்ன் நகர் போன்ற பகுதிகளில் புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சியின் நகரமைப்பு அலுவலகம் சார்பில் வரைபட அனுமதி பெற்றே புதிய வீடுகள் கட்ட வேண்டும். அதேபோல், சாலைகளில் கொட்டி வைக்க கூடிய மணல், ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களை வைத்துக் கொள்வதற்கும் குறிப்பிட்ட தொகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால், விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை, அறிவியல் மன்றம் உள்பட பல இடங்களில் கட்டணத் தொகை செலுத்தாமலே, கட்டுமானப் பொருள்களை சாலைகளில் குவித்து வைத்துள்ளனர். மேலும் புல்லக்கோட்டை சாலையில் மணல், செங்கல் போன்ற பொருள்களை விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் வைத்துள்ளனர். அதேபோல், அறிவியல் மன்றம் அருகே தேவையற்ற கட்டுமானப்பொருள்களையும் குவித்து வைத்துள்ளனர். இதிலிருந்து கிளம்பும் தூசியால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இவற்றை நகர மைப்பு அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் தினந்தோறும் வாகனத்தில் செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர்.
    எனவே, நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற கட்டுமானப் பொருட்களை அகற்றி, நகராட்சிக்கான முறையான கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், நகரும் தூய்மை அடையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai