Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வட்ட அளவில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வானிலை அறிவிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்துப் பேசியது:
    வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்படும் வெள்ளம் மற்றும் சேதங்களை தடுத்து பொதுமக்களை காத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஒன்பது வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் வானிலை முன் அறிவிப்பு குறித்த தகவல்களைக் கண்காணித்து அந்த தகவல்களை உயர் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வானிலை முன் அறிவிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களை மீட்டு, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வட்ட அளவில மீட்பு நடவடிக்கைகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனமழையினால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் தரமான உணவுகள் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கட்டணமில்லா தொலைபேசி: மேலும் வெள்ளதால் ஏற்பட்ட உயிர் சேதம், பயிர் சேதம், கூரை வீடுகள் சேதம், கால்நடை இறப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் கணக்கெடுத்து பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    மேலும், பொதுமக்கள் மழை சேத விபரங்களை, 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
    இக்கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரன், திட்டஇயக்குநர் (ஊரக வளர்ச்சி) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பூமி உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    கால்வாய்களை சீரமைக்க உத்தரவு
    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பொதுபணித்துறை கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள், பேரூராட்சிகளில் நீர் வரத்து உள்ள கால்வாய்கள் முதலானவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள், நகராட்சி பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட தடையாக உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai