Enable Javscript for better performance
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி சிறுகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி சிறுகுளம் கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
    சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் பலர் ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டினர். இப்பகுதிக்கு பெரியார் காலனி எனவும் பெயரிடப்பட்டது.
    இந்தக் கட்டடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதால் அகற்ற வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
    வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டது.
    2012-ஆம் ஆண்டு வருவாய்த்துறையினர் இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கணேசன் என்பவர் தன் உடல்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டிக் கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இதைத் தொடர்ந்து தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஆணையூர் ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 176 அடுக்குமாடி வீடுகளைக் கட்டியது. இந்த வீடுகளில் குடியேறிக் கொண்டு, ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறும், தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்குமாறும் வருவாய்த்துறை அறிவுறுத்தியது.
    இதையடுத்து 41 பேர் வீடுகோரி மனு அளித்தனர். அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், மற்றவர்கள் காலி செய்யும் போது நாங்களும் காலி செய்கிறோம் எனக்கூறி அந்த 41 பேர் உள்பட அனைவரும் ஆக்கிரமிப்பை காலி செய்யவில்லை.
    இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என உத்தரவிட்டது.
    இதையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் ஒட்டுவதற்கு இருமுறை சென்றபோதும், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக சிலர் மிரட்டியதையடுத்து திரும்பிவிட்டனர்.
    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும் அரசு என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் 17ஆம் தேதி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
    எனவே வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 39 கடைகளை அதிகாரிகள் ஜெசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிவகாசி சார்-ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டனர். சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    அச்சக உரிமையாளர்கள் சங்க கட்டடமும் அகற்றம்
    சிறுகுளம் கண்மாய் கரையில் ரயில்வே பீடர் சாலைப் பகுதியில் சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் பட்டா பெற்று 1982-இல் அச்சுப் பயிற்சிப் பள்ளி கட்டடத்தைக் கட்டினர். அதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்பக் கல்லூரியையும் தொடங்கினர். பின்னர், திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் புதிய கட்டடம் கட்டி அங்கு தொழில்நுட்பக் கல்லூரியை மாற்றிவிட்டனர்.
    பழைய கட்டடத்தில் மாணவர் விடுதி இருந்து வந்தது. சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள், இந்தக் கட்டடங்களும் ஆக்கிரமிப்புகள் தான், இவற்றையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 26-11-15-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமன் அச்சக உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்தும், அதில் உள்ள கட்டடங்களை அகற்றவும் உத்தரவிட்டார்.
    இந்நிலையில் கண்மாய்க் கரையில் உள்ள சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க இரண்டு மாடி கட்டடத்தையும் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai