ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே நடைபெற்றுவரும் கழிவுநீர் கால்வாய் பாலம் கட்டும் பகுதியில் புதன்கிழமை சிமென்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா, ரைஸ்மில் ரோடு, பிஏசிஆர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் பாலங்கள் உள்ளன.
இந்தப் பாலங்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், இப்பகுதியில் வெளியேறும் கழிவுநீர் சாலையின் இருபுறமும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு நிலவி வந்தது. மேலும், மழைக் காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பது வழக்கம்.இதனால் கழிவுநீர் வெளியேறும் வகையில், புதிய அகலமான பாலங்கள் கட்ட அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் காந்திசிலை முக்கு, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்திகலைமன்றம் அருகில், ரைஸ்மில் ரோட்டில் புது பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மெயின் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பஸ்கள், கனரக வாகனங்கள் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இந்நிலையில், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாய் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புதன்கிழமை சிமென்ட் சுமை ஏற்றிய லாரி சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் இந்த நான்கு பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், இந்த வழியாக பழைய பஸ் நிலையம் வரும் நகர பஸ்களை டி.பி. மில்ஸ் ரோடு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.