அருப்புக்கோட்டை திருச்சுழி அருகே உள்ள நத்தக்குளம் கிராமத்திற்கு சாலை வசதி செய்துதரக் கோரி புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை திருச்சுழியிலிருந்து கமுதி செல்லும் சாலையில் உள்ளது நத்தக்குளம் கிராமம். இக்கிராமம் பிரதான சாலையிலிருந்து 5 கி.மீ. உள்ளே அமைந்துள்ளது. இந்த 5 கிலோ மீட்டர் சாலை முற்றிலும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இக்கிராமத்திற்குப் பேருந்துகள் வருவதில்லையாம். சாலை வசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் கிராமத்துக்கு செல்லவதில்லையாம். பள்ளி மாணவர்கள் நடந்தே 5 கிலோ மீட்டர் சென்று, பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
தங்கள் கிராமத்திற்குச் சாலை வசதி செய்துதர பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் இந்த கிராம மக்கள் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லையென குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை நத்தக்குளம் கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் நடந்து வந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் செல்வதைப் புறக்கணித்து, திருச்சுழி - கமுதி பிரதான சாலையில் உள்ள ஆனைக்குளம் கிராமத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த நரிக்குடி காவல் ஆய்வாளர் நிதிக்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாணவ, மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னரே போராட்டத்தைக் கைவிட்டு மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.