விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் அனுமதியின்றி பட்டாசுக்கான வெள்ளைத் திரி தயாரித்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (42). இவர், பட்டாசுக்கான வெள்ளைத் திரி தயாரித்து தரும்படி, குல்லூர்சந்தையைச் சேர்ந்த ராமர் (36) என்பவரிடம் கூறினாராம். ராமர், குல்லூர்சந்தையைச் சேர்ந்த செல்லத்தாய் (40), சகோதரிகள் லட்சுமி (25), முத்துலட்சுமி (35) ஆகியோரிடம் திரி தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை வழங்கியுள்ளார்.
மூன்று பெண்களும் வீட்டருகே உள்ள மரத்தடியில் வெள்ளைத் திரிக்கு பசை ஓட்டும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனராம். அப்போது உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பெண்களும் காயமடைந்தனர். மூவரும் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் செய்தபோது செல்லத்தாய் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரை காப்பாற்ற முயன்றபோது தங்கள் மீது தீ பரவியதாக லெட்சுமி சகோதரிகள் தெரிவித்தனராம்.
ஆனால் போலீஸார் புதன்கிழமை மேற்கொண்ட விசாரணையில் திரி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து சத்தியமூர்த்தி, ராமர் மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.