ஆன்லைனில் வாங்கிய தொலைக்காட்சி சேதமுற்றதால் அதற்கு இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஏ.சுதாகரன். இவர் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் பொருள் விற்பனை நிறுவனத்திடம் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.25,990-க்கு வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்த தொலைக்காட்சிப் பெட்டி 9.11.15-ஆம் தேதி சேதம் அடைந்த நிலையில் வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சேவை மையத்தில் சுதாகரன் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நிறுவனம் கூறியபடி, தூதஞ்சல் மூலம் 12.11.15-ஆம் தேதி தொலைக்காட்சிப் பெட்டியை அனுப்பியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட நிறுவனம் மீண்டும் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டியை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த பெட்டியும் சேதம் அடைந்து வந்துள்ளது. இது குறித்து மீண்டும் புகார் கூறியதால் மீண்டும் நிறுவனம் கூறியபடி, 4.12.15 இல் உடைந்த தொலைக்காட்சி பெட்டியை சுதாகரன் திரும்ப அனுப்பியுள்ளார். ஆனால் தொலைக்காட்சி பெட்டி அடங்கிய பார்சல் நிறுவனத்திற்கு போய் சேரவில்லையாம்.
மேலும் தொலைக்காட்சி பெட்டி வந்தவுடன் அதற்கான தொகையை அனுப்பிவிடுவதாக நிறுவனம் கூறிவிட்டது. இது தொடர்பாக பலமுறை தூதஞ்சல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டும் அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சுதாகரன் ரூ.1.50 லட்சம் நஷ்டஈட்டுத் தொகையுடன் புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வழங்க தூதஞ்சல் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நூகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர்
பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பார்சல் அல்லது தபாலை பெற்றுக் கொண்ட தூதஞ்சல் நிறுவனம், அதை கவனமாக உரியவரிடம் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்காவிட்டால் தூதஞ்சல் நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது என்றே கருத வேண்டும்.
எனவே, தூதஞ்சல் நிறுவனம் தொலைக்காட்சி பெட்டிக்கான தொகை ரூ.25,990, மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், செலவுத் தொகை ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை சுதாகரனுக்கு வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த 1 மாத்திற்குள் தொகையை வழங்க தவறும்பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து, தொகை வசூலாகும் தேதி வரை 6 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.