கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட சம சிக்கன நிதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது. இதனை கைத்தறி நெவாளர்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக 1966ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் சம சிக்கன நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இத் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள் பெறும் நெசவுக் கூலியில் 6 சதவீதம் பங்கு உறுப்பினரும், தமிழக அரசு 4 சதவீத பங்கும், சம்பந்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கம் 2 சதவீதம் பங்கும் சேர்த்து, அந்ததந்த சங்கங்கள் உள்ள மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஈட்டு வைப்பாக செலுத்தப்பட்டு, வட்டியும் வழங்கப்பட்டது.
இத் திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் 55 வயது பூர்த்தியானதும், உறுப்பினர் பெயரில் உள்ள ஈட்டு வைப்புத் தொகை வட்டியுடன் உறுப்பினர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு வந்தது. உறுப்பினர்கள் 55 வயதிற்கு முன்பு இறந்து விட்டால், அவரது வாரிசுதாரருக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இத் திட்டத்திலிருந்து 55 வயதிற்குள் உறுப்பினர்கள் விலகினால் திட்டத் தொகையில் அரசு பங்கில் 50 சதவீதமும் அதன் வட்டியில் 50 சதவீதமும், சங்கத்தின் பங்கில் 50 சதவீதமும் அதன் வட்டியில் 50 சதவீதமும் பறிமுதல் செய்யப்பட்டு, நெசவாளர்களின் நலனுக்காக பயன்படுத்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் இந்த தொகைக்கு சம்பந்தப்பட்ட வங்கி வட்டி கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை யாரும் கேட்கப்படாமல் உள்ளதால் வட்டி சேர்க்கப்படாமல் உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உதவி கைத்தறி இயக்குநர் சரகத்திற்குள்பட்ட தொகை ரூ.1,04,086 வங்கியில் உள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தமிழகத்தில் தனித் துறை செயல்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் கடந்த 50 ஆண்டு காலமாக இத்தொகை எந்த ஒரு நெசவாளருக்கும் பயன்படாமல் கேட்பாரற்று உள்ளது.
சம சிக்கன நிதி திட்டத்துக்கு பதிலாக 15.11.1975இல் நெவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்திலுள்ள தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது.
நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் இயற்கை எய்தினால், ஈமச்சடங்கு செலவிற்கு ரூ.2 ஆயிரம் சங்க நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டும், நெசவாளர் சங்கங்களில் பல நஷ்டம் அடைந்துள்ளதால் ஈமச்சடங்கு செலவுத் தொகை பெறுவது மிகவும் சிரமப்படுகின்றனர். சில சங்கங்களில் ஈமச்சடங்குத் தொகை வழங்குவதே இல்லை.
மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர். நெசவாளர் கல்வி அறக்கட்டளையிலிருந்து நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி கற்க கல்வி உதவித் தொகையும் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை.
நெசவாளர் கூட்டுறவு சங்கத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் நலத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் சம சிக்கன நிதி திட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெற்று தனியாக ஒரு நிதியமைப்பு ஏற்படுத்தி நெசவாளர்கள் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.