விருதுநகரில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தும், சரியான முறையில் இயங்காமல் உள்ளன. இதனால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை போலீஸார் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரின் மைய பகுதியில் மாரியம்மன், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெயிலுகந்தம்மன் கோயில்கள், பஜார், பழைய பேருந்து நிலையம் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விருதுநகரின் முக்கிய சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, மாரியம்மன் கோயில் சந்திப்பு, பஜார், மதுரை சாலை, ஆத்துப்பாலம், எம்ஜிஆர் சிலை சந்திப்பு, அல்லம்பட்டி விலக்கு சாலை முதலான இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், போலீஸார், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காண முடிந்தது.
அதேபோல், நகர் எல்லைக்குள் வெளியூர் நபர் மற்றும் வாகனங்கள், சந்தேகத்திற்கு இடமான நபர் ஆகியோர் வந்து செல்வதையும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், அக்கேமராக்கள் தற்போது பல இடங்களில் செயல்படவில்லை. ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா சேதமடைந்ததால் சரியாக செயல்படவில்லை. அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் இருக்கும் கேமராவும் அதே நிலையில் தான் உள்ளது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவும், குற்றவாளிகள் தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த கேமராக்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.