சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

  By DIN  |   Published on : 04th January 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 18 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சில மருத்துவமனைகளில் மட்டுமே எம்.ஆர்.ஐ ஸ்கேன் (காந்த ஒத்ததிர்வு வரைவு படம்) மையம் உள்ளது. கடந்த 2003 இல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மையத்தின் மூலம் ஏராளமான நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.  இதை விட நுட்பமான எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் உடலின் உள்பகுதியில் உள்ள பிரச்னைகளைக் கூட கண்டறியலாம். அதன் காரணமாக மருத்துவர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வர அறிவுறுத்துகின்றனர்.
  தென் மாவட்டங்களில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மட்டுமே எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளது. ஏழை நோயாளிகள் மதுரைக்குச் சென்று காத்திருந்து ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது.  அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க கட்டணமாக ரூ.2.500, தனியார் நிறுவனங்களில் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.   விருதுநகர் போன்ற அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மையங்களுக்கு சென்று கூடுதல் தொகை கொடுத்து ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது.
  எனவே, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai