சுடச்சுட

  

  விருதுநகர் போக்குவரத்து பணிமனையில் ஓய்வூதியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  By DIN  |   Published on : 07th January 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கக் கோரி விருதுநகர் போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
  தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்த சுமார் 65 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.84 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த 2016 ஜனவரி முதல் வருங்கால வைப்பு நிதி, 2012 அக்டோபர் முதல் பணிக் கொடை வழங்கப்படவில்லை. மேலும், 2015 ஜூலை முதல் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை மற்றும் 20 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை. 2010 முதல் விடுப்புச் சம்பளமும் வழங்கப்படவில்லை. மாதாந்திர ஓய்வூதியத் தொகை மட்டும் தடையின்றி வழங்கப்பட்டு வந்தது.
  இந்நிலையில் டிசம்பர் மாத ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதியம் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை விருதுநகர் போக்குவரத்து பணிமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஓய்வூதியர்களை அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். ஆனால், அதையும் மீறி அலுவலக வளாகத்திற்குள் சென்று ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தினர்.
  இதையடுத்து, பொது மேலாளர் பாஸ்கரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திங்கள்கிழமைக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் ஓய்வூதியர்கள் அதை ஏற்க மறுத்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்பு, வட்டாட்சியர் சங்கரபாண்டியன் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில், ஜனவரி 11-ஆம் தேதிக்குள் டிசம்பர் மாத ஓய்வூதியம் வழங்கப்படும், நிலுவைத் தொகை முழுவதும் வரும் 30-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,  பிப்ரவரி முதல் மாதாமாதம் ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலையில் அனைத்து ஓய்வூதியர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.
  முன்னதாக இப்போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் தங்கப்பழம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai