சுடச்சுட

  

  ஸ்ரீவிலி. அருகே வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

  By DIN  |   Published on : 13th January 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
     ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 4 ஆம் தேதியும், கும்பாபிஷேகம் பிப்ரவரி 6 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எனவே, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், போக்குவரத்தையும், கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட வேண்டும்.
     பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை, பேரூராட்சி செயல் அலுவலர் மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில், கோட்ட தீயணைப்பு அலுவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும்.
    மருத்துவர் குழுவினர் போதிய மருந்துகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    கும்பாபிஷேக தினத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க, அரசு போக்குவரத்துக் கழக மண்டலப் போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியச் செயற்பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டப் பணிகளை சிறப்புடன் மேற்கொண்டு, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
    இக்கூட்டத்தில், மாநிலத் தேர்தல் முன்னாள் ஆணையர் (ஓய்வு) வை. பழனிச்சாமி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுரேஷ், சிவகாசி சார்-ஆட்சியர் அமர்குஷ்வாஹா, நகர் காவல் ஆய்வாளர் ஜே. மகேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai