சுடச்சுட

    

    "மாவட்டத்தில் 1.25 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது'

    By DIN  |   Published on : 20th January 2017 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
       ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில், வியாழக்கிழமை மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் மேலும் கூறியதாவது:
       நடப்பு கல்வியாண்டில் ரூ.8,47,86,807 மதிப்பில் 22,951 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3.50 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 39,301 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுள்ளன.
       தமிழக அரசு மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனால், தற்போது அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் சேர்க்கை விகிதமும் உயர்ந்துள்ளது. மாணவர்களிடையே சமத்துவத்தை உருவாக்கும் வகையில், ஒரே மாதிரியான விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார்.
      விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,216 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
      இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மு. சந்திரபிரபா முத்தையா, முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் சர்வேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai