சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டு: விருதுநகர் மாவட்டத்தில் 4-ஆம் நாளாக போராட்டம்: அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும் தொடர்கிறது

  By DIN  |   Published on : 22nd January 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் நான்காவது நாளாக சனிக்கிழமையும் ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும் போராட்டம் கைவிடப்படவில்லை.
  விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை போராட்டம் தொடங்கியது. நான்காவது நாளான சனிக்கிழமையும் பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மைதானத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
  சிவகாசி
  சிவகாசி பேருந்து நிலையம் அருகே நான்காவது நாளாக நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில், கல்லூரி மாணவ, மாணவியர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
  இந்நிலையில், காலை முதல் அவ்வப்போது சிறு தூறல் மழை பெய்து வந்தாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்லவில்லை. இதேபோல், திருத்தங்கலில் காளியம்மன் கோயில் முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள், மின்வாரிய அலுவலகம் முன்பாக, செயற்பொறியாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சிவகாசி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
  சாத்தூர்
  சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் ஆண்களும், பெண்களும் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்து முக்கிய சாலை வழியாக நீதிமன்றம் வரை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த மனிதச் சங்கலிப் போராட்டத்துக்குப் பின்னர், அனைவரும் பேரணியாகச் சென்று மீண்டும் மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
  ராஜபாளையம்
  ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மாணவ, மாணவியர், இளைஞர்கள் நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
  அருப்புக்கோட்டை
  அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஏராளமான மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, காவல் துறையினர் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். சனிக்கிழமை மாலை, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும், நிரந்தரத் தீர்வு கோரி அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai