விருதுநகர் அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் காவலாளி இல்லாததால் 54 மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் அருகே சூலக்கரையில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் தாய், தந்தையரை இழந்த பெண் குழந்தைகளுக்கு தங்கி படிப்பதற்காக விடுதியுடன் கூடிய பள்ளி உள்ளது. இங்கு ஒரு விடுதி காப்பாளர் தலைமையில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள், காவலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 மாணவிகள் தங்கி படித்து ள்ளனர். தற்போது ஆறு வயது முதல் 18 வயதுடைய 54 மாணவிகள் தங்கியுள்ளனர். இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 5 பேருக்கு மூன்று ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர் பாடம் நடத்துகின்றனர்.
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகள் வேறு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், வேறு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளை சிலர் கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் வெளியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் காப்பகத்தில் மாணவிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. அதேபோல், சில முக்கிய பிரமுகர்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் உடைகளை மாணவிகளுக்கு வழங்கப்படுவதில்லையாம். காப்பகத்தில் இரவு நேரங்களில் வெளிப்புற விளக்குகள் எரிவதில்லை. இங்கு பணியாற்றும் காவலர் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனால் இங்குள்ள மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு குழந்தைகள் காப்பக விடுதி காப்பாளர் லெட்சுமி செவ்வாய்க்கிழமை கூறியது: காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு முட்டை உள்பட தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வாங்குவதில்லை. அவர்கள் கொடுக்கும் புதிய ஆடைகளை மட்டுமே வாங்கி கொள்வோம். அதை மாணவிகளுக்கு உடனடியாக வழங்கி விடுவோம். மாணவிகள் வெளியிடங்களில் படிக்க சென்று வரும் போது அவர்களது பாதுகாப்பிற்காக உடன் செல்ல உதவியாளர் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். இனிமேல், அவர்களது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.