அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி சாலைப்பிரிவு அருகே உள்ள குறுகிய பாலத்தில் விபத்து அபாய எச்சரிக்கைப்பலகை அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் வதுவார்பட்டி கிராமத்திற்குச் செல்லும் சாலைப்பிரிவு அருகே மழைநீர் வடிகால் மீது குறுகலான பாலம் உள்ளது. சாலை அமைக்கப்பட்டபோது இப்பாலம் அருகே விபத்து அபாய எச்சரிக்கைப்பலகை ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகிவிட்டதால் அந்த எச்சரிக்கைப் பலகை உடைந்து காணாமல் போய்விட்டது. இதனால் இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.
ஆகவே இப்பகுதியில் விபத்து அபாய எச்சரிக்கைப்பலகை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டியம்மாள் கூறியது: இந்த குறுகலான பாலத்தில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்களே நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்கு ஆளாகின்றனர். சிலசமயம் கார்கள், சரக்குவாகனங்களும் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன என்றார்.