விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பகுதியில் பணிகள் முடியாமல் ரூ. 46 லட்சம் விடுவித்ததாக புகார்

விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பகுதியில் பாதாளச் சாக்கடை குழாய்கள் மற்றும் தொட்டிகள் அமைக்கும் பணிகள் முழுமையடையாமலே
Published on
Updated on
1 min read

விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பகுதியில் பாதாளச் சாக்கடை குழாய்கள் மற்றும் தொட்டிகள் அமைக்கும் பணிகள் முழுமையடையாமலே ஒப்பந்ததாரருக்கு ரூ.46.60 லட்சம் நிதியை குடிநீர் வடிகால் வாரியம் விடுவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கடவுப்பாதை செல்கிறது. இந்த வழியாக நாள்தோறும் 50 ரயில்கள் சென்று வருகின்றன. அதனால் கடவுச்சாலை அடிக்கடி மூடப்படுவதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டது. 
தற்போது, தண்டவாளப் பகுதியில் ரயில்வேத்துறை சார்பில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்,  மேம்பாலம் அமையும் இரண்டு பகுதிகளிலும் ஏற்கெனவே இருந்த பிரதான குடிநீர்க் குழாய்கள், பாதாளச் சாக்கடைத் தொட்டிகள் மற்றும் மின்சார வயர்கள் ஆகியவற்றை அகற்றி மேம்பாலத்தின் ஓரத்தில் பதிக்க முடிவெடுக்கப்பட்டது.  
அதில் பிரதான குடிநீர் குழாய்களை மாற்றம் செய்ய ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமமூர்த்தி சாலை ரயில்வே பீடர் சந்திப்பு முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை பாதாளச் சாக்கடை தொட்டிகள், வீட்டு இணைப்பு, பிரதான கழிவு நீர் குழாய் பதிக்கும் பணிகளைச் செய்திட நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.46.60 லட்சம் நிதி வழங்கப்பட்டது.  கடந்த 2016 ஜூன் 23 ஆம் தேதி விருதுநகர் நகர்மன்றத்தில் இதற்காக அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கழிவுநீர் குழாய்கள் பதிப்பதற்கான ஒப்பந்தத்தை, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மட்டும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் கழிவுநீர் குழாய் பதித்தல் மற்றும் பாதாளச் சாக்கடை தொட்டி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
மேற்குப் பகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ராமமூர்த்தி சாலையின் மேற்குப் பகுதியில் அணுகுசாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எனவே அப்பகுதியில் பாதாளச்சாக்கடை அமைக்க முடியாது என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 இந்நிலையில் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நடைபெறாமலும், மற்றொரு பகுதியில் அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளது. 
ஆனால் 8 மாதத்திற்கு முன்பே ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை குடிநீர் வாரிய அலுவலர்கள் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சரண்யா செவ்வாய்க்கிழமை கூறியது: விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து விட்டது என நினைக்கிறேன். அதற்கான நிதி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டு விட்டதா என்பதை பார்த்து தான் கூற முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.