Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். 
         விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர்  பி.எம் .நரசிம்மன் (திருத்தணி தொகுதி) தலைமையில், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களான (சட்டப்பேரவை உறுப்பினர்கள்) ராஜா ( தாம்பரம் தொகுதி), கனகராஜ் (சூலூர் தொகுதி), இரா. குமரகுரு (உளுந்தூர்பேட்டை தொகுதி), எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் ( தென்காசி தொகுதி), தங்கம்தென்னரசு (திருச்சுழி தொகுதி), ஏ.பி. நந்தகுமார் (வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி),  பரமசிவம் (வேடசந்தூர் தொகுதி), பாஸ்கர் (நாமக்கல்) ஆகியோர் வந்திருந்தனர்.
         பின்னர், இக்குழுவினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர், விருதுநகர் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பூங்கா பணிகளையும், விருச்சிகம் மகளிர் முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் முதியோர் இல்லத்தினையும் ஆய்வு செய்தனர். 
       அதைத் தொடர்ந்து, சிவகாசி வட்டம் மேலத்தாயில்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, விஸ்வநத்தம்புதூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம், வடமலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
         மேலத்தாயில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான நவீன வகுப்பறை, கட்டடம், கூடுதல் ஆய்வகங்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் தேவைப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சட்டப்பேரவைக் குழு பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்தனர். 
          மேலும், விருதுநகரில் பூங்கா அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
        தொடர்ந்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றையும்  ஆய்வு செய்து, அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.     விஸ்வநத்தம்புதூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம், வடமலாபுரத்தில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, அலுவலர்களிடம் குழுவினர் அறிவுறுத்தினர். 
          இந்த ஆய்வின்போது, துணைச் செயலர்கள் சிவகுமரன், பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தினகரன் (சிவகாசி), மங்கள்ராமசுப்பிரமணி (சாத்தூர்), இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மனோகரன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (திருநெல்வேலி) கே. ராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai