Enable Javscript for better performance
நரிக்குடி அருகே மணல் திருட்டு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    நரிக்குடி அருகே மணல் திருட்டு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 24th March 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆற்று மணல் திருட்டை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் (பொ) ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    மக்காச்சோளத்துக்கு நிவாரணம் இல்லை:
    இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டிற்கான காப்பிட்டு தொகை ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செலுத்தியவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. காப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அது குறித்த மனுவை ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுக்க வந்தால் அவர் வாங்க மறுக்கிறார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
    வெங்காய காப்பீட்டில் வித்தியாசம்:ஆவியூர் பகுதியில் 105 பேர் வெங்காயம் விவசாயத்திற்கு கூட்டுறவு வங்கியில் காப்பீடு செலுத்தியுள்ளனர்.
    இவர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு தலா ரூ. 4 ஆயிரம் மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளனர். ஆனால் அரசகுளம், குரண்டி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 23,500 ம், உப்பிலிகுண்டு பகுதியில் ரூ.25,510 காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, காப்பீட்டுத் தொகை செலுத்திய அனைத்து வெங்காய விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
    கடனை செலுத்த காலநீட்டிப்பு:
    நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை முறையாக இழப்பீடு வழங்காததால், வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
    சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வசூலிக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
    மணல் திருட்டு:
    மேலும், விவசாயிகள் கரும்பு பயிருக்கு 20 ஆண்டுகளாக பிரிமியம் செலுத்தி வந்தனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்பு பயிரை இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து நீக்கி உள்ளனர். எனவே, கரும்பு பயிருக்கு காப்பீடு பெற வேண்டும்.
    நரிக்குடி அருகே உள்ள உலக்குடி, அத்திகுளம், மானூர், நாலூர், ஆதித்தனேந்தல் ஆகிய பகுதிகளில் பட்டா நிலங்களில் சவடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று, கவுசிகா ஆற்றில் தினந்தோறும் 300 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
    காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை:
    இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் பதில் கூறுகையில், இன்சூரன்ஸ் செலுத்திய விவசாயிகளுக்கு ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காய விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான முறையில் இழப்பீடு வழங்காதது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    மேலும், மணல் கொள்ளையை தடுக்க போலீஸ், வருவாய்துறை அலுவலர்கள், கனிமவளத்துறை அலுவலர்கள் தினமும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai