Enable Javscript for better performance
கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை: தொல்.திருமாவளவன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை: தொல்.திருமாவளவன் கண்டனம்

    By DIN  |   Published on : 18th May 2018 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்திருப்பதன் மூலம்  ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது என, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
        சிவகாசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள வியாழக்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
        கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது  சட்டநடைமுறை அல்ல. பாஜக.வில் 104 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். சுயேச்சை ஒருவர் ஆதரவுடன் தற்போது பாஜகவின் பலம் 105. ஆனால், அங்கு ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை.
         இந்நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக, ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.    ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது ஜனநாயகப் படுகொலையாகும். எடியூரப்பா முதல்வராகி இருப்பது மிகவும் அதிர்ச்சியானது. அவரது தலைமையிலான பாஜக ஆட்சி நீடிக்காது.
         மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தபோதும்,  அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை. மேகாலயாவில் 2 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த பாஜக, மற்ற கட்சியினரை பேரம் பேசி ஆட்சி அமைத்துள்ளது.
         பிரதமர் மோடியின் இந்த செயல் பாராட்டத்தக்கதல்ல. இது அநாகரீகமானது. இதிலிருந்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பிரதமர் மோடி எதையும் செய்வார் எனக் கூறலாம். எனவே, பிரதமர் மோடிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.
        காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மோடி காவிரி ஆணையம் என பெயர் மற்றினார். காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஆணையமோ மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என, மத்திய அரசு நினைத்து செயல்படுகிறது. இதற்கு, மாநில அரசும் உடந்தையாக உள்ளது.     எனவே, மக்களவைத் தேர்தலுக்குள் பாஜக.வை எதிர்கொள்ள, சந்திரபாபு நாயுடு,  மம்தா உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி இணைத்து, மதச்சார்பற்ற அணியை உருவாக்க வேண்டும். இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளேன்.    விருதுநகர் மாவட்டத்தில் பிரதானமாக உள்ள பட்டாசுத் தொழில், பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசை விலக்கி, மத்திய அரசு இந்தத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 
        பேட்டியின்போது, அக்கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலர் சதுரகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai