Enable Javscript for better performance
கோபாலபுரம்-பாலவநத்தம் சாலைப் பணி தாமதம்: விவசாயிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கோபாலபுரம்-பாலவநத்தம் சாலைப் பணி தாமதம்: விவசாயிகள் அவதி

    By DIN  |   Published on : 18th May 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கோபாலபுரம் -பாலவநத்தம் இடையே ஜல்லிக் கற்கள் போடப்பட்ட நிலையில் சாலைப் பணிகள் கிடப்பில் உள்ளதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
          கோபாலபுரம் கிராமத்தில் விவசாயமே முதன்மையாக உள்ளது. இதில், பெரும்பான்மையான விளைநிலங்கள் கோபாலபுரத்திலிருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரந்துள்ளன. 
         இந்நிலையில், பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டம் 2017-18-இன்படி, கோபாலபுரம் -பாலவநத்தம் இடையிலான சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டதுடன் பணிகள் அப்படியே விடப்பட்டுள்ளன. அதன்பின்னர், கடந்த 5 மாதங்களாக சாலைப் பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
         இது குறித்து சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் கூறுகையில், இச் சாலையில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டதும், சாலைப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனக் கூறுகின்றாராம். 
         இந்நிலையில், இக்கிராமப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், அன்றாட விவசாயப் பணிகளுக்குச் செல்பவர்களும், விவசாய இடுபொருள்களை வாகனங்களில் கொண்டு செல்லவும் சாலையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டுள்ளதால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், விவசாயப் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
         எனவே, இச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட   அதிகாரிகளுக்கு  கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்னனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai