பட்டாசு ஆலைகளை மூடுவதற்கு அரசாணை பிறப்பிக்க உரிமையாளர்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை மூடுவதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை மூடுவதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள்,  சென்னை தொழிலாளர் நல ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் உபயோகிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பதற்கு தீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. 
இந்த கால அளவுக்கு மேல் பட்டாசு வெடித்த மக்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாவிட்டால் குழந்தைகள் விரும்பும் கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு, புஷ்வாணம், தரைச்சக்கரம் , சாட்டை போன்ற 60 சதவீதம் பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரியம் நைட்ரேட்டுக்கு மாற்றுப்பொருள் அறிவிக்கப்படவில்லை. 
கால அவசாகத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் மக்கள் பட்டாசு வெடிக்க அச்சப்படுவர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்களிடம் முன்பணம் பெற்றும், வங்கியில் கடன் பெற்றும் தான் செயல்பட்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விற்பனையாளர்கள் முன் பணம் கொடுக்க மறுக்கின்றனர். 
இதனால் பட்டாசுத் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளிப் பண்டிகை விடுமுறைக்குப்பின்னர் ஆலைகள் திறக்கப்படவில்லை. எனவே எங்கள் ஆலைகளை மூடுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். 
தங்களின் ஆணை கிடைத்ததும், அனைத்துக் தொழிலாளர்களுக்கும் சட்டப்படியாக கொடுக்க வேண்டிய பணிக்கொடையை கணக்கிட்டு கொடுத்து விடுகிறோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். 
மேலும் அனைத்து ஆலை உரிமையாளர்களும் படிப்படியாக கடிதம் அனுப்ப தயாராகி வருகின்றனர். இதன் நகல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் , விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என பட்டாசு தயாரிப்பாளர்  இளங்கோவன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com