ஓட்டுநர் உரிமம் பெற இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தலாம்: விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமம் தொடர் பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணம் இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்தார். 
 இது குறித்து வெள்ளிக்கிழமை மேலும் அவர் கூறியதாவது:  வாகனம் சம்பந்தப்பட்ட பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக் கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி வந்தனர். தற்போது நிகழாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான (பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணம் முழுவதுமாக மனு தாரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து செயல்படுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை செலுத்தி பயன் பெறலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று தகுந்த தேர்வில் கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம், மனுதாரர்கள் அலுவலகத்துக்கு வந்து பணம் செலுத்துவதால் கால விரயமும், காத்திருப்பதும் தவிர்க்கப்படும். அதேபோல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யவும் மற்ற சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com