சிவகாசியில் "இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி' விரைவில் தொடக்கம்: விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி

சிவகாசி அஞ்சலகத்தில் "இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி' விரைவில் தொடங்கப்படும் என விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி நிரஞ்சனா தேவி தெரிவித்தார்.

சிவகாசி அஞ்சலகத்தில் "இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி' விரைவில் தொடங்கப்படும் என விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி நிரஞ்சனா தேவி தெரிவித்தார்.
தேசிய அஞ்சல் வார விழாவை (அக். 9 -15) முன்னிட்டு சிவகாசி சுழற் சங்க மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் தலை கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் எஸ்.முத்துக்குமாரி தலைமை வகித்தார். சுழற் சங்க நிர்வாகிகள் ராஜகோபால், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி என்.நிரஞ்சனாதேவி கண்காட்சியை தொடக்கி வைத்து, செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
செப்டம்பர் 1 இல் பிரதமர் மோடி "இந்திய அஞ்சலக பெமண்ட் வங்கி'யை தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த வங்கி விருதுநகர் மாவட்டத்தில் 5  அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 2500 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையம், மாவட்ட ஆட்சியர் வளாக அஞ்சல் நிலையம், வடமலைகுறிச்சி உள்ளிட்ட 5 அஞ்சலகங்களில் இது தொடங்கப்பட்டுள்ளது.   இதில் கணக்கு தொடங்க ஆதார் அட்டையின் நகல் மட்டும் போதுமானது. பணம் கட்டாமல் கணக்கு தொடங்கினால் 30 நாள்களுக்குள் ரூ.100 கணக்கில் போட வேண்டும்.
 இந்த கணக்கில் நெட்பேங்கிங் வசதி உள்ளிட்டவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்டவைகளையும் இதன் மூலம் செலுத்தலாம். அஞ்சலக சிறு சேமிப்பு கணக்கிலிருந்து, இந்த கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த கணக்கிலிருந்து வேறு வங்கிக்கு பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த கணக்குக்கு பாஸ்புக் கிடையாது. அதற்கு பதிலாக ஏ.டி.எம்.கார்டு போல ஒரு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதன்மூலம் பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம். விரைவில் இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்படும்.
"எனது தாய்நாட்டுக்கு கடிதம்' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவ,  மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். இது தேசிய அளவிலான போட்டி. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04562-243091 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இக் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், நிர்வாகிகள், அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் தூத்துக்குடி ஜெபராஜ்மைக்கேல் ஆகியோர் சேகரித்த அஞ்சல்தலைகள் மற்றும் காசுகள் இடம் பெற்றிருந்தன.
இதில் நாடு சுதந்திரம் அடைந்த பின் 1947 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்ட காந்தி புகைப்படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலை (விலை மூன்றரையணா), மல்லிகை, ரோஜா, சந்தனம், காஃபி உள்ளிட்ட நறுமணம் வீசும் அஞ்சல் தலைகள், முக்கோணம், வட்டம், உள்ளிட்ட பல்வேறு வடிவிலான அஞ்சல் தலைகள், அண்டார்டிக்காவில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலை, பூட்டானின் தங்கத்திலான அஞ்சல்தலை, ஆஸ்திரியாவின் வைர அஞ்சல் தலை, அரபு தேசத்தின் வெள்ளி அஞ்சல் தலைகள் இடம் பெற்றிருந்தன.
 முன்னதாக சிவகாசி துணை கோட்ட அஞ்சலக அதிகாரி வி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். இக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, நாககுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com