ஸ்ரீவிலி. அருகே தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோப்புகளுக்குள் காட்டு யானைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோப்புகளுக்குள் காட்டு யானைக் கூட்டம் புகுந்து மா, தென்னை, கொய்யா மற்றும் எலுமிச்சை மரங்களை  சேதப்படுத்தியுள்ளன.
  மம்சாபுரம், மாரியம்மன்கோவில் தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம் (64). இவருக்கு செண்பகத்தோப்பு, மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அவர் தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை ஆகியவை பயிரிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைக் கூட்டம் பாலசுப்பிரமணியத்தின் தோப்பினை சுற்றி அமைத்துள்ள இரும்பு கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளே புகுந்து தோப்பில் இருந்த 43 தென்னை மரங்களை சேதப்படுத்தின. 
மேலும் கொய்யா மரங்களில் இருந்த கொய்யா பழங்களையும் சேதப்படுத்தியுள்ளன. ஆழ்துளைக் கிணறு மற்றும் தண்ணீர் குழாய்களை கால்களால் மிதித்து சேதமாக்கியுள்ளன. 
இது குறித்து விவசாயிகள் கூறியது: வனத்துறையினர், வன விலங்குகளுக்கு காப்புக் காட்டில் தண்ணீர் வசதி செய்து தரவில்லை. தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்புவதற்கு  நிதி இருந்தும், அதை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் தான் வன விலங்குகள் தனியார் தோப்புகளுக்குள் தண்ணீர் தேடி வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. தண்ணீர் தேடி சாலையைக் கடந்து வரும் மான் உள்ளிட்ட விலங்குகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. மாவட்ட நிர்வாகம் வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் நிலங்களில் வன விலங்குகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உடனே உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  இதனிடையே யானைக் கூட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் செண்பகத்தோப்பு பகுதிக்குள் யானை கூட்டத்தின் அபாயத்தை உணராமல் சென்று வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com