1,880 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருள்கள்

விருதுநகர் மாவட்டத்தில் 1,880 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக

விருதுநகர் மாவட்டத்தில் 1,880 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.                                                                                                                                           
விருதுநகர் மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம்  ஆகியவற்றின் சார்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை  கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. 
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 240 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டத்தில் சீர்வரிசைகள் வழங்கினார். மேலும் 23 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கரவாகனங்கள் மற்றும் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர வாகனங்கள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியது: கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய காலத்தில் அளிக்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப்பணிகளால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க இயலும். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வந்த இந்த திடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட 12 ஊர்களில் 1,880 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டத்தின் கீழ் சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயக்குமார், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுரேஷ், சுகாதாரப்பணிகள் இணைஇயக்குநர் ஆர்.மனோகரன், மாவட்ட சமூகநல அலுவலர் ரா.ராஜம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் எ.பத்மாசனி வரவேற்றார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரா.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
விருதுநகர்: விருதுநகரில், சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விருதுநகர் ஒன்றியத்தை சேர்ந்த 280 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் இட்டு, கலவை சாதம் வழங்கினர். மேலும், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள், ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்துவது அவசியம் என வலியுறுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.  
சாத்தூர்:  வெம்பக்கோட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவிற்கு  குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாராணி தலைமை வகித்தார். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சொக்கம்மாள் வரவேற்றார். இதில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com