ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்

ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி, பாம்பலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி முருகன். இவரது மனைவி பார்கவி. 8 மாத கர்ப்பிணியான பார்கவிக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, உடனடியாக அவரது கணவர், அருகில் உள்ள தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பார்கவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அச்சமயம் அங்கு பணி மருத்துவர் இல்லாததால், செவிலியர் மூலம் பார்கவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், சுகாதார நிலையத்துக்கு அருகில் வசிக்கும் பெண்களை துணைக்கு வைத்துக் கொண்டு, செல்லிடப்பேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டவாறு பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதில், பார்கவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டதை பார்த்த உறவினர்கள், மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு ஆம்புலன்ஸ் வரத் தாமதமாகும் என்பதால், தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்து, 40 நிமிடங்களுக்கு பின்னரே தாயையும், சேயையும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அனுப்பியுள்ளனர். அதைத்தொடர்ந்து, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பார்கவி தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த பார்கவியின் கணவர் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கால் தான் தங்களது குழந்தை இறந்ததாகவும், இதற்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, பணியிலிருந்த மருத்துவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தளவாய்புரம் போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com