கட்டங்குடி நெசவாளர் குடியிருப்புக்கு ரேஷன் கடை அமைத்துத் தர வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை வட்டம், கட்டங்குடியில் உள்ள நெசவாளர் குடியிருப்புக்கு தனியாக ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


அருப்புக்கோட்டை வட்டம், கட்டங்குடியில் உள்ள நெசவாளர் குடியிருப்புக்கு தனியாக ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்டங்குடி கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முதலமைச்சர் நெசவாளர் பசுமை வீடுகள் குடியிருப்பு. இங்கு 260-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான சர்க்கரை, அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வாங்க, கட்டங்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று வருகின்றனர்.
அங்கு கட்டங்குடியைச் சேர்ந்த கிராம மக்களுக்குப் பின்னர் தான் நெசவாளர் குடியிருப்பினருக்கு பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதனால், இப்பகுதியினர் காத்திருப்பு, தள்ளுமுள்ளு, அலைக்கழிப்பு போன்ற சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, கூட்டநெரிசல், அலைச்சலை தவிர்க்க, நெசவாளர் குடியிருப்புக்கு தனியாக ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நெசவாளர் குடியிருப்பினர் ஏற்கெனவே மனு அளித்திருந்தனர்.
இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, ரேஷன் கடை அமைத்துத்தர மாவட்ட நிர்வாகத்துக்கு கட்டங்குடி நெசவாளர் குடியிருப்பினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com