மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

விருதுநகரில் சனிக்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


விருதுநகரில் சனிக்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தை விட கூடுதலாக 4 மணி வரை மின் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், வழக்கமான பணிகளை செய்ய முடியாமல் பொதுமக்கள், வணிகர்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில், மாலையில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மீண்டும் ஒரு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், மழை காரணமாக பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை, மேல் ரத வீதிகளில் பாதாள சாக்கடை தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
ராஜபாளையத்தில்: ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கத்தினால் தூக்கமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. குறிப்பாக அரசு மருத்துவமனை அருகே மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. பலத்த மழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், நகரில் மின்சாரமும் தடைபட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்குள்ளாகினர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து, சற்று குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகாசியில்: சிவகாசி பகுதியில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வெம்பக்கோட்டை சாலை, என்.ஆர்.கே. சாலை, புதுரோட்டுத்தெரு, திருத்தங்கல் சாலையில் காமராஜர் பூங்கா உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் வாய்க்காலை முறையாக பராமரிக்காததால், குட்டியணைஞ்சான் தெரு, ஏழுகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் மூன்று அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது.
மேலும், பலத்த காற்று வீசியதால், ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் உயர் மின் அழுத்த கம்பிகளில் மரக்கிளைகள் முறிந்து, விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சிவகாசி அருகே கங்காகுளத்தில் கண்ணன் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கனமழையால், அங்கு சுவர் சரிந்து விழுந்தது. இதில், சக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான 8 ஆடுகள் உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com