விருதுநகர், சாத்தூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

விருதுநகரில் 44 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,புல்லலக்கோட்டை சாலையில் உள்ள கல்கிடங்கில்


விருதுநகரில் 44 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,புல்லலக்கோட்டை சாலையில் உள்ள கல்கிடங்கில் கரைக்கப்பட்டன.
விருதுநகர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் கிராமங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விருதுநகர், ஆமத்தூர், ஆர்.ஆர். நகர், பாண்டியன் நகர் முதலான பகுதிகளிலிருந்து 44 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசபந்து மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பஜார், மேலரத வீதி, பழைய பேருந்து நிலையம், புல்லலக்கோட்டை சாலை வழியாக ஊர்வலமாக கல்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து 31 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டது.
இதனை இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கே.கே.பொன்னையா, மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. வழிநெடுக பக்தர்கள் கொட்டும் மழையில் விநயாகர் சிலைகளை வரவேற்று, வழிபட்டனர். பின்னர், அனைத்து சிலைகளும் திருவண்ணாமலை கோனேரி கண்மாயில் கரைக்கப்பட்டது.
இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார், டி.எஸ்.பி.க்கள் ராஜா, ரவிச்சந்திரன், பிரபாகரன் மற்றும் 11 காவல் ஆய்வாளர்கள், 105 காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 925 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சாத்தூரில்: சாத்தூர் பகுதியில் முக்குராந்தல், படந்தால், அண்ணா நகர், தென்றல் நகர், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கபட்டிருந்தன. இச்சிலைகள் அனைத்தும் சனிக்கிழமை மாலை, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. முக்குராந்தல் பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலம், வடக்குரதவீதி, மாடவீதி,பிள்ளையார்கோயில் தெரு, தென்வடல் புதுத்தெரு, மதுரை பேருந்து நிறுத்தம், பிரதானச் சாலை, ரயில்வே பீடர் சாலை வழியாக மீண்டும் முக்குராந்தல் வந்து, ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள கீழசெல்லையாபுரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் கரைக்கப்பட்டன.
இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள குளம், கிணறு, ஏரிகளில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் சாத்தூர் காவல் துணைகாண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com