"தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காமராஜரே காரணம்'
By DIN | Published On : 01st April 2019 06:05 AM | Last Updated : 01st April 2019 06:05 AM | அ+அ அ- |

தமிழகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு எளிமை மிக்க தலைவரான காமராஜரே காரணம் என விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஓபிசி) நிர்வாகிகள் கூட்டம், அதன் பொறுப்பாளர் ரோட்டாஷ் பசுவையா மற்றும் தமிழ்நாடு தலைவர் நவீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ ற்றது.
இதில், கலந்து கொண்ட விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசியது:
இந்த மக்களவை தேர்தல் நாட்டின் வறுமை ஒழிப்புக்கு எதிரான முக்கியமான தேர்தலாகும். ஏழைகளின் ஏழ்மையை விரட்ட ராகுல்காந்தி சபதம் ஏற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தென் தமிழகம் மீது அதிக பற்று கொண்டதன் காரணமாகவே ராகுல், வயநாட்டில் வேட்பாளராக போட்டியிட ஒத்துக் கொண்டுள்ளார்.
பல்வேறு பகுதியிலிருந்து இங்கு வந்துள்ள நிர்வாகிகள், காமராஜர் இல்லத்தைச் சென்று பார்க்க வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு பின்னரும் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக்கக் காரணம் காமராஜர் தான். அவரால் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. ராகுல்காந்தி தலைமையிலான அரசு, பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு பாதுகாப்பாக விளங்கும்.
எனவே, ஏழைகளுக்காக ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டங்களை நிர்வாகிகள் தினந்தோறும் 20 வாக்காளர்களை சந்தித்து சொல்லி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.