சிவகாசியில் அச்சு இயந்திர கண்காட்சி நாளை தொடக்கம்
By DIN | Published On : 11th April 2019 07:14 AM | Last Updated : 11th April 2019 07:14 AM | அ+அ அ- |

சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏப். 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அச்சு இயந்திர கண்காட்சி நடைபெற உள்ளது என அச்சங்கத்தலைவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: அச்சுத்தொழில் பல புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. இந்த புதிய தொழில் நுட்பங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இங்குள்ள சிறிய அச்சக உரிமையாளர்களும் புதிய இயந்திரங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த அச்சு இயந்திர கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் புதிய தொழில் நுட்பத்துடனான ஆப்செட் அச்சு இயந்திரங்கள், டிஜிட்டல் அச்சு இயந்திரங்கள், அச்சுமை தயாரிக்கத் தேவையான வேதிப் பொருள்கள், உதிரிபாகங்கள், புதிய தொழில் நுட்பத்துடன்கூடிய அச்சுக் காகிதங்கள், அட்டைகள் உள்ளிட்டவை இடம் பெறுகிறது. புதிய தொழில் நுட்பத்துடனான 3 டி அச்சுக்கலை, யூவிகோட்டிங், லேமினேசன் உள்ளிட்ட இயந்திரங்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
இந்த கண்காட்சி ஏப். 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிவகாசி ரயில்வே பீடர் சாலையில் உள்ள அச்சக உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில் நடைபெறும் என்றார்.